Tuesday, October 30, 2012

சபிக்கப்பட்ட சாதிகளா நாங்கள்.?

சீரியஸ் பதிவு. கேளிக்கை,கொச்சைப்படுத்துதலுக்கு இடமளிக்கப்படவில்லை///

இரத்தம் வருவது கண்களில் இருந்து.... 

மனிதனுக்கு வாழ்வில் துன்பம் வருவது வழமையானதே. அதை தடுப்பதற்குரிய சக்தி எமக்கில்லை. துன்பம் இல்லாத வாழ்வு உப்பில்லாத உணவு போன்றது. ஆனால்,துன்பத்தை எமது நண்பனாக்கி கொண்டாலும் வாழ்வு நரகமாகிவிடும். இவ்வாறு உலகில் பிறந்தவர்க்கு இன்பம் துன்பம் இரண்டும் வாழ்வில் கலந்த கலவைகள். மக்களுக்கு துன்பம் வந்ததும் துடைப்பதற்கு ஒரு வழியை காட்டி வைத்திருக்கிறான் தலைவன் அவன்தான் இறைவன் என்னும் நம்பிக்கை தீபம். இவைதானே வையகத்தில் வாழும் உயிர்களுக்கு அவன் கொடுத்த நியதி. ஆனாலும் எம் மீது இறைவனுக்கு அப்படியொரு அக்கறை போல. அதனால் தான் வாழ்வில் துன்பங்களைக் காட்டவில்லை வாழ்வையே துன்பங்களாக்கி விட்டான்.கண்களில் இருந்து கண்ணீர் வரலாம். ஆனால்நாம் அழுகின்றோம் ரத்தம் வருகின்றது!
                                                                                       
எம் தீய செயல்களால் துன்பத்தை தேடினோமா.? இல்லை. ஒருவேளை மட்டுமே உண்டாலும் பல வேலை செய்து பிழைக்கின்றோம். யுத்தம் என்னும் அரக்கன் வந்தோ கொடுங்கோல் புரிந்து கொடுமையான விளைவுகளைகாட்டி நான்காண்டுகள் நரக வேதனையைத் தந்து சென்றான். எம்மவர் விதைத்த விதை என்னும் வினைகள்  களை கொய்ய வந்து எம் உறவுகைக் காவு கொண்டதோ தெரியவில்லை. உறவுகளை இழந்தோம் உடமைகளை இழந்தோம். உயிரற்ற ஜடங்களாய் தடுப்பு முகாம் என்னும் கல்லறைகளுக்குள் தூங்கினோம். இப்போது ஏங்குகிறோம் அங்கேயே இருந்திருக்கலாம் என்று// இதுதான் இன்று எங்கள் நிலைமை.
சொந்த இடங்களை தேடி அலைந்தோம். நாம் விட்டுச்சென்ற வீடுகளில் எம் விருந்தினர்கள் வந்து குடியிருந்தனர். வேறுயாருமல்ல மரங்களும்,செடிகளும்,கொடிக்களுமே! அடிப்படை வசதிகள் எதுவுமின்றி முக்கியமாக உண்ண உணவின்றி இருக்க இடமின்றி எம் முன்னோர் செய்த புண்ணியத்தில் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்தோம்.

                               

எங்கிருந்தோ வந்த இரக்கமனம் படைத்த மனிதர்கள் கூடாரம் கட்ட மரங்களையும், படங்குகளையும் தந்து சுய தொழில் செய்யவென வழிகளையும் காட்டிசென்றனர்.(எம் தொப்பிள் கொடி உறவுகளும் அல்ல,தொப்பிள் கொடிகளை அறுத்து சிவப்பு ஆறு ஓட வைத்த அரக்கர்களும் அல்ல)  முற்பிறப்பில் செய்த பலாபலன்களை இப்பிறப்பில் அனுபவித்தோம் என்று எண்ணிக்கொண்டு புதிய வாழ்க்கை வாழ வழி சமைத்தோம். உறவுகளிடம் கையேந்தினோம் வாழ வழி காட்டுங்கள் என்று. யாழ்ப்பாணம்,வவுனியா,கொழும்பு ஏன் லண்டன்,பிரான்ஸ் என்று நீளும் பட்டியலில் மாட மாளிகை கட்டிக்கொண்டு உல்லாச வாழ்க்கை வாழும்  மாமன்,சித்தப்பன்,பெரியப்பன்,அங்கிள்,ஆண்டி, ஒன்டுவிட்டது, ரெண்டுவிட்டது எல்லாம் சொல்லுதுகள் "எங்களுக்கே சோத்துக்கு வழி இல்லை, இதில உங்களுக்கு உதவ ஏலுமா".  நிறுத்தினோம் பிச்சை எடுப்பதை. மனமுள்ளவன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தான். எம் எல்லோருக்கும் அல்ல. எம்மில் சிலருக்கு. குடில்களையும் கூடாரங்களையும் கோயில்களாகக் கொண்டு அரை வயிறு கஞ்சியுடன் வாழ்ந்தோம்.வாழ்ந்துகொண்டிருந்தோம்.

                                                   ************************

தமிழன் என்றால் தலை நிமிரவே முடியாது போலும். அதிலும் வன்னி என்னும் ஜன்னிக்குள் அகப்பட்டு வாழ்பவன் அறுபட்டு அறுபட்டு அணுவணுவாய் துடிதுடித்து சாவதை தான் ஆண்டவன் விரும்பினான், விரும்புகிறான், விரும்பிக்கொண்டே இருப்பான். எங்கள் பூமியை தாய்க்கும் மேலாக மதித்தோம். இப்போது மிதிக்க வைத்து விட்டார்களே. 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல இந்தமாரி காலமும் எம்மை வாட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த காலத்து மழையை முகாமுக்குள் கழித்ததால் எஞ்சியது வெறுப்பும் அவநம்பிக்கையும் மட்டும்தான்.
ஒற்றைக்கையுடனும், இருகால்களுடனும்/ இருகால்களுடனும்,ஒற்றைக்கையோடும் சுணை கெட்டு போன எமக்கு வாழ பழகியது. இனிமேலும் அடி விழுந்தால் இறப்பதே கதி என எண்ணி வாழ்ந்தோம். இயற்கையும் சீண்டுகிறது எம்மை. சொந்த மண்ணைவிட்டு தொலை தூரம் அனுப்புகிறது. ஆர்மிக்காரன் அடித்தான் தாங்கினோம், எம்மவனும் விரட்டி விரட்டி அடித்தான் தாங்கினோம், இப்போது இயற்கை எனும் வடிவில் இறைவனும் தாக்குகிறான் ஓடுகிறோம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். முல்லைத்தீவு கொள்ளயடிக்கப்படுவது சரித்திரத்தில் எழுதப்படாத உண்மையோ.? மீன் பிடிக்க போகாதே! கடலில் சூறாவளி. வானிலை ஆய்வு மையம் கடற்கரையை அண்டி வாழும் மக்களை உடனே வெளியேறுமாறு எச்சரிக்கை.


இதுதான் நேற்று எமக்கு கிடைத்த செய்தி. செய்தி கேட்டு எழுவதற்குள் செங்காற்றாய் வந்து வெறியாடி எம் கூடாரங்களை டமாரங்கள் என தட்டிச் சென்றுவிட்டது. நிற்கதியாய் மீண்டும் ஒரு 2006 ஐ இயற்கை வடிவமைத்து சந்தையில் விற்பனை செய்யுமோ என்றொரு ஏக்கமும் சேர்ந்து சாவைக் காதலிக்க வைக்கின்றன! பனையால் விழுந்தோம் வலிதீர்ந்து எழுவதுக்குள் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடும் மிதித்துவிட்டது என்றாகிவிட்டது எம் கதை.

பாடசாலைகள், கோவில்கள் என நேற்றும் இன்றும் மீண்டுமொரு மினி இடப்பெயர்வு(இது எங்களுக்கு மினி தானே, இனிமேலும் மெகா காத்திருக்கா.? இப்பவே சொன்னால் நல்லம்/ இங்கேயே மாண்டுவிடுவோம்)  செல் வந்து விழுந்த இடமெல்லாம் மழைநீரைக் குடித்து குட்டி குளங்களாய்  காட்சி தருகின்றது. ஒருகாலத்தில் வறட்சியால் அழிந்தோம். இப்போது குளிர்ச்சியால் அளிக்கின்றோம். மொத்தத்தில் ஐம்பூதங்களுமே ஒன்று சேர்ந்து தாம் கொண்ட வெறியை தாண்டவமாடி எம் மீது தீர்த்தது போன்றொரு உணர்வு.
இக்கணம் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை. வன்னித்தமிழர் நியாயம் கேட்ட தருணங்களில் எல்லாம் நிர்க்கதியாக்கப்பட்டது நிதர்சனமான உண்மை. ஒன்று மட்டும் தெரிகின்றது வருகின்ற நாட்கள் இயற்கையின் படைப்பில் வன்னிக்கு கொடூரமானவை என்று.///

எங்களோடு இருக்கும் ஒவ்வொரு தமிழனின் உள்ளமென்னும் கருங்கல் குகையில் (காரணத்துக்கு காரணமில்லாமல்)எழுகின்ற 
ஒரே கேள்வி  :- சபிக்கப்பட்ட சாதிகளா நாங்கள்.?
4 comments:

மைந்தன் சிவா said...

சபிக்கப்பட்ட மக்களாகி எத்தனையோ வருடங்களாச்சு!நல்ல பதிவு சகோ!

M.குமரன் said...

ஹ்ம்ம். உண்மை தான் அண்ணா// உங்கள் பார்வையிடலுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்////

Robert said...

ஐம்பூதங்களுமே ஒன்று சேர்ந்து தாம் கொண்ட வெறியை தாண்டவமாடி எம் மீது தீர்த்தது போன்றொரு உணர்வு.// கூடவே சில கொடூர மனம் படைத்தவர்களும் சேர்ந்து. உங்களின் அந்த கேள்வியை படிக்கும் போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.

M.குமரன் said...

உண்மை சகோதரா. வருகைக்கு நன்றி... தொடர்ந்தும் வாருங்கள்////