Sunday, September 15, 2013

தமிழனுக்கு - அங்கே தமிழ்நாடு இங்கே யாழ்ப்பாணம்

வேறு மொழிகளுக்கு இல்லாத செழுமை தமிழுக்கு உண்டு. தமிழுக்கு அமுதென்று பெயர், தமிழுக்கு நிலவென்று பெயர் என்று நம் தாய் மொழியை எத்தனையோ விதமாக சிறப்பித்து சென்றிருக்கின்றனர் கவிஞர்கள். அத்தனை சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழியை பேசுகின்ற நாம் உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்துவருவது எம் இனத்துக்கே பெருமை. தமிழ் வாழாத இடமும் இல்லை தமிழுக்கென்றோர் இடமும் இல்லை என்றான் கவியொருவன்!தமிழுக்கு ஆதாரமாய் பல கோடி தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சில நண்பர்கள் முகநூல் வழியாக யாழ்மண் தொடர்பாக வினவிய சில விடங்களை கூடியளவில் புகைப்படங்கள் மூலமாக தெளிவுபடுத்தவே நீண்டநாட்களுக்கு பின்னர் இந்த பதிவு.

இந்தியாவின் பெரு மாநிலங்களில் ஒன்றான தமிழ் நாட்டில் தமிழ்தான் முதன்மை மொழி. அங்கே தனி அரசு அமைத்து தமிழர் வாழ்வது உலகறிந்த விடயம். அந்த வழியில் வந்த நாமும் ஒரு சிறப்பான தமிழ் பாரம்பரியங்களை கொண்டு வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஆவோம். எமக்கென்று இதுவரை ஒரு தனியாட்சி / சுயாட்சி இல்லாததுதான் வருத்தமளிக்கும் விடயமாகும்.ஆனாலும் எதிர்காலத்தை கற்பனையில் வடிவமைத்து ஏதோ ஒரு நம்பிக்கையில் நிம்மதியாக கழிகின்றது எம் பொழுதுகள். ஈழத்தமிழர் என்றால் வெளிநாடுகளில் சரி சபைகளில் சரி பேசப்படும் ஊர் யாழ்ப்பாணம் தான். யாழ்மண் பற்றி சொன்னால் ஈழம் பற்றி சொன்னதற்கு சமனாகும். காரணம் இங்கேதான் தமிழ்வளர்த்த பெரியார்களும் ஆங்கிலேயனால் கூட வீழ்த்தமுடியாத வீரம் நிறைந்த மாமன்னர்களும் வாழ்ந்து வரலாறாகி சென்றிருக்கின்றனர்.

எம் உயிர் மூச்சே கலாச்சார விழுமியங்களை கட்டிக்காப்பதுதான். ஆனாலும் மேலைத்தேய கலாச்சாரம் எங்கள் மண்ணிலும் வேரூன்றி மெல்லத்தளைந்து  விருட்சமாக எத்தனித்து வருவது ஏற்க்கப்படவேண்டிய உண்மை. தமிழ்நாட்டோடு அப்படியே பொருந்திப் போகாவிட்டாலும் யாழ்ப்பாண மண்ணின் பண்பாடுகளோடு சில விடயங்கள் ஒத்துப்போகின்றமை குறிப்பிடவேண்டிய விடயமாகும்.தமிழர் வீர விளையாட்டுக்களில் இருந்து திருமண, உணவு, கல்வி, போக்குவரத்து போன்ற அனைத்து அடிப்படை விடயங்களிலும் தமிழ்நாட்டோடு ஈழத் தமிழன் வேற்றுப் பிரிப்பின்றி தொடர்புபட்டு காணப்படுவது எம்மூதாதயர்கள் வந்த வழி தமிழ்நாடே என்பதை உணர்த்தி நிற்கின்றது!!
#தமிழ் - யாழ்மண்ணுக்கே உரித்தான இன்னொரு அம்சம் இம்மக்கள் பேசுகின்ற தமிழாகும். இதுதான் வெளிநாடுகளில் யாழ்ப்பாண தமிழன் என்பதை அடையாளப்படுத்தி நிற்கிறது. இதை சிலர் அவமானமாக நினைப்பதும் சிலர் அடையாளமாக பாதுக்கப்பதும் என மாறுபட்டு  காணப்படுகிறது இதுதொடர்பான மக்களின் மனோநிலைகள்.
#கல்வி- இலங்கையைத்தாண்டி உலக அளவில் பல கல்விமான்களைத் தந்த பெருமை கொண்ட ஒரே பூமி யாழ்ப்பாணம் தான். ஆனால் இன்று பல நாகரிக மாற்றங்களால் கல்வியும் தன் சிறப்பம்சத்தை இழந்துபோகும் அபாயம் மேலோங்கி காணப்படுகிறது.
#உணவு - யாழ்ப்பாணம் என்றால் கறுத்தக்கொழும்பான் என்பர். கறுத்த கொழும்பான் என்பது ஒரு மாம்பழ வகையாகும். இதை உண்ட வெளியூரார் சலித்ததும் இல்லை கேட்டு வாங்காமல் சென்றதும் இல்லை எனலாம். அவ்வளவு இனிய பழம் ஒன்று.அடுத்தது புட்டு (பிட்டு) - நீங்கள் அறிந்த கேரளத்து குழல் புட்டின் அத்துணை சிறப்புக்களும் உள்ளடங்கியது தான் யாழ்ப்பாண மண்ணில் அவிக்கப்படும் புட்டு.

கூழ் - ஆடிப்பிறப்புக்கு கூடிப்பனங்கட்டி கூழும் குடித்து மகிழ்வோம் யாம்.
பனை- பனை வளம் மிக்க பிரதேசமான யாழ்ப்பாண மண்ணில் நுங்கு, சர்க்கரை, பனங்கட்டி, கள் போன்ற எதற்கும் பஞ்சம் இல்லை. கற்பக தருவாம் இயற்கையின் கொடையான பனைமரத்தை பெரியவில் பெற்றது யாம்செய்த புண்ணியம் என்பேன்.


#நூலகம் - தெற்காசியாவிலேயே அரிய பல நூல்களை கொண்டமைந்த நூலகம் தான் யாழ்ப்பாண பொது நூலகம். ஆனாலும் இது கடந்த கசப்பான காலங்களில் தேசத்துரோகிகளால் எரியூட்டப்பட்டது அனைவரும் அறிந்தவிடயம். ஆனாலும் இன்று மீண்டும் கட்டமைக்கபப்ட்டு கட்டடக்கலை யால் மிளிர்கிறது தவிர நூல்கள் என்னும் பொக்கிசங்களால் அல்ல என்பது அனைத்து தமிழரும் வருந்தவேண்டிய மேலும் சிந்திக்க வேண்டிய விடயம்.


இன்னும் சில அழகான புகைப்படங்கள் ...........இயற்கை அன்னையின் கொடைகள்  நிறைந்த கடலால் சூழப்பட்ட ஒரு அழகிய தீவில் உள்ள வளம் நிறைந்தயாழ்மண்ணில் பிறந்து இத்தனை சௌகரியங்களையும் அனுபவிக்க என்ன தவம் செய்தேன்!!
 -நன்றி-2 comments:

Dinesh Kumar said...

அருமையாக கூறியுள்ளீர்கள். :-)

yarl kumaran said...

நன்றி நண்பரே.!!
வருக வருக :)