Wednesday, November 21, 2012

இலங்கை பாஸ்போர்ட் (ஆ)ஒபீஸ் - 'பச்சிளம்' பதிவரின் பயணம்


என்னைப்போன்றவர்களுக்காக - வாங்க பாஸ்.!

சாதாரண தரம் முடித்ததும் வெளிநாடு செல்லும் ஆவலில் முன்பின் தெரியாத வெளியூருக்கு புறப்பட்ட பயணம். யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்தில் மாலை 8 மணியளவில் தனிமையில் காத்திருப்பு. (படபடப்புடன்) இதற்கு முதல் யாழ் நகரை விட்டு தனியாக வெளியில் சென்றதில்லை.
ஆனாலும் மனதுள்ளே ஏதோ ஒரு எண்ணம் குடிகொள்கிறது.(நானும் பெரியவன் என்று) அம்மாவிடம் தனிமையில் நான் செல்வதாகவும், எனக்கு பயம் இல்லை, கொழும்பிலே நண்பர்கள் இருக்கின்றனர் என்றும் பெருமையாக சொல்லி.... பெரும் சிரமத்துக்கு மத்தியில் என்கூட வரவிருந்த சித்தப்பாவையும் கட் பண்ணியதை நினைத்தபோது அடுத்த நாட்கள் பற்றியும், எங்கே இறங்க போகிறேன் என்ன நடக்கபோகிறது என்றும் மனதோரம் திகில் ஆரம்பித்தது. என்மேல் எனக்கு நானே அதிக நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டதாக ஒரு ஆதங்கம் எழுகிறது.

9.00 மணியளவில் ''சிற்றி எக்ஸ்பிரஸ்'' சொகுசு பேருந்து யாழ் தரிப்பிடத்தை விட்டு மெல்ல நகர்கிறது. எங்க ஊர் மாட்டு வண்டியை விட மெதுவாக நகர்ந்த பேருந்து A9 வீதியில் இறங்கியவுடன் சவாரி மாடுபோல ஓட ஆரம்பித்தது. நான் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் பெரியவர்(55 வயது இருக்கும்) ஒருவர் (தம்பி இதுதானே 19பதாம் நம்பர் சீற்) என்ற கேள்வியுடன் வந்து அமர்ந்தார். அவரும் யாழில் இருந்து கொழும்பு செல்லும் பயணிதான். ஆயினும் அனுபவத்தால் உயர்ந்தவர் போல் தெரிந்தார். சஞ்சலம் ஏதுமின்றி சிரித்தமுகத்தோடு காட்சியளித்த அவர் அந்த நேரத்தில் எனக்கு கடவுளாக தெரிந்தார்.ஒரு  அரட்டைக்கு பின்னர் என்னை அறியாமலேயே ( என்ன சத்தம் இந்த நேரம்) என்ற பாடலோடு உறங்கிவிட்டேன்.

நள்ளிரவு 1.00 மணியளவில் யாரோ என்னை தட்டி எழுப்பினார்கள். (தம்பி எழும்பும் இப்ப அநுராதபுரத்தில சாப்பிடுரதுக்காக பஸ்ச நிப்பாட்டி இருக்கினம், வாரும் சாப்பிடுவம்) என்றார் அருகில் இருந்தவர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த நேரத்தில் சாப்பாடா? என்று மனதில் நினைத்தபடி அவரின் வால்பிடியாய் சென்றேன் உணவகத்தை நோக்கி. பசிக்கவில்லை இருந்தும் அவரின் வற்புறுத்தலுக்காக கொஞ்சமாக சாப்பிட்டுகொண்டிருக்கும் போது பேருந்து அலாரம் அடிப்பது போல வீருட்டு கத்தியது. விரைவாக சாப்பிட்ட எனக்கும் அவரே பணம் கொடுத்ததாக கூறினார். சங்கடத்துடன் மீண்டும் ஆரம்பமாகியது பயணம். இருந்தும் அந்த பெரியவர் என்னை தன் பொறுப்பில் வந்தவன் போல கவனித்தது,பாதுகாத்தது அப்போதுதான் புரிந்தது. காலை ஆறு மணியளவில் நான் ''ஆமர் ஸ்ட்ரீட்'' சந்தியில் இறங்க வேண்டும் என்று அவருடன் உரையாடினேன். குறித்த இடத்தில நான் இறங்குவதற்கு வழி காட்டியாய் அமைந்த அந்த பெரியவரின் தொடர்பு 'ஆமர்' சந்தியோடு முடிவுக்கு வந்தது.


கொழும்பு மாநகரின் 'கா(ர்)ப்பெற்' வீதியினூடாக கடுங்குளிருக்கு மத்தியில் எனது கால்கள் சப்பாத்தின் உதவியுடன்  உரசி உரசி இயங்க ஆரம்பித்தது. ஒரு மாதிரியாக விடுதி ஒன்றைக் கண்டுபிடித்து(900 ரூபாய்  நாள் வாடகையில்) குடியேறினேன். (?) யாழில் கொஞ்சமாவது நாகரீகத்தை கையாண்ட அனுபவத்தில் கொழும்பு விடுதிகளின் உபகரணங்களை மகிழ்வுடன் பயன்படுத்தினேன். என் வயதில் கொழும்பில் உள்ளவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று வரும் வழியில் பார்த்த எனக்கு ஒரே ஆச்சரியம்.// குளித்து ஆயத்தமாகி விடுதியின் வாயிலில் நின்ற தமிழ் பேசக்கூடிய ஆட்டோ சாரதி ஒருவரின் உதவியோடு (சிங்களம் சத்தியமா தெரியாது சார்) வந்த நோக்கத்தை நிறைவேற்ற மீண்டுமொரு பயணம்( சுற்றுலா(?) பாஸ்போர்ட் அலுவலகம் நோக்கி! (ஆட்டோக்கார அண்ணை, 'சின்ன பெடியன் எண்டு கரன்சியை ஓவரா கறந்திடுவாரோ') என்று பயம் வேறு மனசுக்குள். இதுதான் நீங்கள் கூறிய இடம் என்று சொல்லி குறித்த அலுவலகம் முன்பு கொடு போய் நிறுத்தினார்.'' சில அறிவுரைகளையும் எனக்கு தர மறக்காத அவர், மீற்றரை பார்த்து காசு தரும்படி கூறினார். எனக்கு இந்த மீட்டர் மேட்டர் புதிதுதான். அனாலும் நன்றாக இருந்தது. 250 ரூபாயை கொடுத்துவிட்டு (வெளியே ஒரு இடத்தில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து 500 கட்டிவிட்டு) ஆட்டோ அண்ணன் கூறியவற்றை நினைவில் வைத்துகொண்டு கடவுச்சீட்டு அலுவலகத்தின் உள்ளே நுழைகிறேன்.

 வரவேற்பறையில் 500 க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். 'என்ன கொடும சார் இது' எனற பிரேம்ஜி யின் டயலாக் தான் ஞாபகம் வந்தது. இவ்வளவு பேருமா? என்று எண்ணிக்கொண்டு சென்ற எனக்கு பின்னர் தான் தெரிந்தது அவர்கள் விண்ணப்பதாரிகளுடன் கூட வந்தவர்கள் என்று. அந்த இடத்தில் என் சித்தாபாவும் இருந்திருந்தால் அவரின் வைத்தெரிச்சலுக்கு ஆளாகி இருப்பேன் என்று நினைத்துகொண்டு 10,000 பணத்தையும் பேஸில் வைத்துவிட்டு உள்ளே சென்ற போது நேரம் காலை 9.00 மணி இருக்கும். அரைகுறையாய் ஆங்கிலம் தெரியும் என்றமையால் (எனக்கு என்ன, நான் ஆங்கிலம் பேசுவேன் தானே, [பயப்பட கூடாது; நீ எதுக்கு பயப்படனும்) என்று வடிவேலுவின் வசனங்களை மனதோரம் தவள விட்டு முன்னாலே மண்டையை ஆட்டி சிரித்து பேசிக்கொண்டிருந்த அலுவலரிடம் சென்றேன். அவரும் ஏதோ என்னை விசித்திரமாக பார்ப்பதாக எனக்குள் ஒரு உணர்வு. கென்றோல் பண்ணிக்கொண்டு மேலே இருந்த பலகைகளில் எழுதி இருந்தவற்றை வாசித்து வாசித்து ,முதலாமவரிடம் அடையாள அட்டை,பத்திரங்கள், படிவங்கள் என்று கொண்டு சென்றவற்றை கையளித்துவிட்டு. 30 நிமிட காத்திருப்பு. கிடைத்த நேரத்தை பயன்படுத்தி அங்கும் இங்குமாக எனது மைக்ரோபோன்களை ( அதுதான் காதுகள்/ அவ்) திருப்பினேன். எல்லாம் 'கசமுசா' என்றே கேட்டது. ஒரு தமிழ் வார்த்தை கூட அந்த 30 நிமிடத்தில் என் காதில் விழவில்லை. அப்போது ஒரு தாழ்வுணர்ச்சி எனக்கும் சிங்கள மொழி தெரிந்திருந்தால் நானும் பயப்படாமல் கொழும்பிலே எங்கும் செல்லலாம் என்று. ஆனால் அது நீண்ட நேரம் தாக்கு பிடிக்கவில்லை. தமிழை தேடிய என் காதுகளில் திடீர் என்று ஒரு இசை கேட்டது.அனைவரும் எழுந்து நின்றனர். நானும் அவர்களைப்பார்த்து எழுந்தேன். தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பித்தது(இசையை வைத்து மட்டுமே இனம் கண்டுகொண்டேன், எதுவும் புரியவில்லை) ஒருபடியாக ''ஸ்ரீலங்கா மாதா'' முடிந்தது.

உரத்த தொனியில் எனது முழுப்பெயரை அழைத்தார் அந்த( officer )ஆபிசர். அவரிடம் சென்று ஒரு துண்டையும் அடையாள அட்டையையும் வாங்கி விட்டு அடுத்த கவுண்டரில்7,500 ரூபா பணம் கட்டிவிட்டு (ONE DAY  சேவிஸ், ஹம்ம் :'( ) மீதியாக கிடைத்த ஒரு சிட்டையை மட்டும் வைத்துகொண்டு மீண்டும் காத்திருப்பு ஆரம்பமாகியது. ஏதும் புரியாதவனாய், அங்கும் இங்கும் அங்கலாய்த்துகொண்டு இருந்தேன். (மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இல்லை) என்னை கவனித்து கொண்டிருந்தவர் போல ;ஒரு இளைஞர் வந்து நான் கையில் வைத்திருந்த சிட்டையை பார்த்துவிட்டு எனக்கு புரியாத மொழியில் ஏதோ சொன்னார். நான் சொன்னேன் (sorry, i don't know sinhala, i'm tamilion) என்று இதற்கு இடையில் நான் தமிழன் என்று ஒரு சிங்கள நண்பரிடம் சொன்னது என்னிடத்தே மேலும் உற்சாகத்தை வரவழைத்தது. அவரும் ஆங்கிலத்தில் பேசலானார். என்னை 12 மணியளவில் வந்து பாஸ்போர்ட்டை பெற்றுகொள்ளுமாறு கூறினார். சரியென்று சாப்பிடலாம் என்று வெளியில் கிளம்பி அருகில் உள்ள கடையொன்றில் மதிய உணவை முடித்துவிட்டு மீண்டும் அலுவலகம் நோக்கி வந்தபோது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நேரத்தை பார்த்தேன் 12.20 ஆகிவிட்டது. இருந்தும் காத்திருப்பு தொடர்கிறது. மீண்டும் அந்த நபர் என்னை நோக்கி வந்து " என்னுடைய பெயர் அழைக்கபட்டு இருக்கும் எனவும், நீங்கள் நேரம் தவறிவிட்டீர்கள் எனவும் கூறினார். இடி விழுந்தது போலாயிற்று என்பாடு.

இருந்தும் என்னை ஒரு அலுவலரிடம் கூட்டிசென்ற அந்த (சகோதரன்) ''ஹ்ம்ம் சகோதரனாம்:)'' விபரங்களை கேட்டறிந்து 13 ஆம் இலக்க மேசைக்கு செல்லுமாறு பணித்தார். பதற்றத்துடன் மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் தட்டி தடுமாறி ஒருமாதிரியாக excuesme sir என்று கேட்டு உள் நுழைந்த என்னுடைய சிட்டையை வாங்கி பார்த்த அந்த அலுவலர் மீண்டும் மீண்டும் கையொப்பங்களை உற்று பார்த்தார். இருந்தும் சிறிது நேரத்தில் என் பாஸ்போர்ட் என் கைக்கே வந்து சேர்ந்தது. வெற்றிக்களிப்பில் எதையோ பெரிதாக சாதித்து விட்டதாக எண்ணிக்கொண்டு உதவிய சிங்கள சகோதரனுக்கும் நன்றி கூறிவிட்டு வெளியே வருகின்றேன். அப்போது அனைத்தும் அழகாகவும், எனக்காக காத்திருப்பது போலவும் ஒரு உணர்வு. ''தமிழ் படங்களில் வருகின்ற ஹீரோக்கள் போலவாம்'' அடையாளம் இல்லாத கொழும்புக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கும் பெரிய மனிதர்களே (என் அப்பா, அம்மா கூட) தனியாக செல்ல பயப்படுகையில் நான் சாதித்தவனாகவே தெரிந்தேன்.


அன்று மாலை விடுதியில் நின்ற அதே ஆட்டோவை பிடித்துக்கொண்டு நீண்ட நாள் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட ''கோல்பேஸ்'' கடற்கரைக்கு புறப்பட்டேன். அங்கே தற்செயலாக இடம்பெற்றுக்கொண்டிருந்த கண்காட்சி என்னை வரவேற்கவென தயார் செய்யப்பட்டதாக 'துரை' மனதில் ஒரு களிப்பு. சுட்ட ரொட்டியுடன், அம்மாவுக்கு ஒரு அழைப்பு+பஸ் புக்கிங்// மனதில்  மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நான் தனிமையை விரும்புபவனாக அன்றுதான் என்னை உணர்ந்தேன்.

அதே இரவில் கொட்டஹேனா பஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் செல்ல " அன்னை முத்துமாரி'' பேருந்துக்காய் வெயிட்டிங். வரும்போது இல்லாத துணிவும், அகந்தையும் என் மனதில் குடிகொண்டிருந்தன.அப்போது அந்த பெரியவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் உதவிய சகோதரனும்தான் நினைவுக்கு வந்தனர். சொந்தங்களை தொலைத்தவன் போல ஒரு உணர்வு புதிதாய் எழுந்தது. எனினும் பேருந்தில் ஏறியவுடன் அனைத்தும் மறந்தேன். 'கலகலப்பு' திரைப்படத்துடன் அழகான, வயிறுகுலுங்க சிரித்த யாழ் நோக்கிய பயணத்தில் எனக்கருகில் யாரும் இல்லை. ஆனாலும் பேருந்தில் இருந்த தொலைக்காட்சி அந்த குறையை நிறைவேற்றி இருந்தது. 
சுபம் :)

குறிப்பு- இதை படித்து யாரவது கடுப்புற்றிருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். புதிதாக பல இடங்களில் இருந்து (தனியாக சில,பல காரணங்களுக்காக) கொழும்பு செல்லும் என்னைபோல சிறுவர்களுக்காகவே(?) இதை பகிர்ந்தேன். 


6 comments:

மைந்தன் சிவா said...

அபாரமான பயண கட்டுரை சகோ!முழுவதுமாய் படித்தேன் போர் அடிக்கவில்லை.

M.குமரன் said...

அப்படியா!!!
...............எதிர்பார்கவே இல்லை. மிக்க மகிழ்ச்சி சகோதரா///வருகைக்கும்,வாழ்த்துரைக்கும்///

♔ம.தி.சுதா♔ said...

வணக்கம் தம்பி பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்

தங்கள் அனுபவத்தை ரசித்து வடித்திருப்பது தான் மிகவும் பிடித்திருக்கிறது...
நான் கூட தனிமையில் ஓரிரு தடவை தான் சென்றதுண்டு...

மற்றையது நான் வவுனியாவில் தான் பாஸ்போட் எடுத்தேன் 10 நாளில் தந்து விட்டார்கள்.. அதுவும் வீட்டுக்கே அனுப்பினார்கள்

M.குமரன் said...

வணக்கம் அண்ணன், வருகைக்கும், கருத்துக்களும் நன்றிகள் சகோ!!

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT ..PLEASE WRITE MORE ABOUT PEOPLE,PLACES,POLITICS,PILGRIMAGE ETC.
YOU HAVE A GREAT WRITER IN YOU! JAFFNA GAVE GREAT WRITERS TO THE TAMIL WORLD!

yarl Kumaran said...

நன்றிகள் சகோதரா!!!