Saturday, November 16, 2013

சச்சின் கடவுளாகிறார் - வேண்டும் வரம் கொடுக்கிறார்

இன்றைய நாளை பொறுத்தவரை சச்சின் என்ற தனி மனிதன் அத்தனை சமூக வலைத் தளங்களையும் வளைத்து போட்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் சச்சின் நாமம் தான். இந்தியா கடந்து உலக நாடுகளெங்கும் வசிக்கும் சச்சினின் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வழியனுப்பும் இந்த வேளையில் அவருக்கு கிரிக்கட் வாழ்க்கையில் வயதோ (24) இருபத்தி நான்கு.! எப்போது இந்த மனுஷன் ஓய்வு பெறப்போகிறார். இந்தாள டீம்ல இருந்து தூக்குறாங்க இல்லையே என்று வசைபாடிய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூட இன்று சொட்டு கண்ணீர் வடித்து கடவாயில் சிரிப்பை வரவழைத்து கட்டிப்பிடித்து கொஞ்சி குலாவுவதை மறந்துவிட இயலாது. 

 எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று நானறிவேன் என்று அடிக்கடி அவரைப்பற்றி செய்திகள் வரும்போதெல்லாம் சச்சின் கூறி வந்தார். அதற்கு சரியான தருணமாக அவர் இந்த அழகிய தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது பலருக்கும் இப்போதுதான் தெரிகிறது. 
எவரும் நினைத்து பார்க்கமுடியாத 200 டெஸ்ட் போட்டிகள் என்ற இமாலய மைல் கல்லை எட்டிப்பிடித்த சச்சினை சக வீரர்களும் கண்ணீர் விட்டு வழியனுப்பினர். ''வாழ்ந்தால் சச்சினை போல் வாழவேண்டும், சச்சின் இல்லாத கிரிக்கட்டா, கிரிகட் கடவுள் எங்கள் சச்சின், கிரிக்கட்டின் அவதாரம் எங்க தெய்வம்'' என்று பதிவுகள் பேஸ்புக் ட்விட்டர் எங்கும் வியாபித்து கிடக்கின்றன. இதிலே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கபோவதாக இந்திய அரசு சற்று முன்னர் அறிவித்துள்ளது. இது கூட தேவையற்றது என்று முகநூலில் விவாதிக்கப்படுவது வேறு விறுவிறுப்பை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவின் பீகாரை சேர்ந்த நடிகர் ஒருவர் சச்சினுக்கு கோவில் கட்டியுள்ளதாகவும் நாளை மறுதினம் அந்த கோவிலை திறக்க போவதாகவும் கூறி எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறார்.வெறும் சொற்களால் சச்சினை கடவுள் என்றழைத்த அவரின் ரசிகர்களுக்கு இது பேரதிர்ச்சி இன்ப அதிர்ச்சி.!!


மனிதர் ஒருவருக்கு கோவில் கட்டுவது என்பது எவ்வாறான கோணத்தில் நோக்கப்பட போகின்றது என்பது தெரியவில்லை. ஆனாலும் சச்சினி தீவிர விசிறிகள் இதை புகழ்ந்து பாடப் போகிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. வேடிக்கை என்னவென்றால் கிரிக்கட் மட்டை மற்றும் பந்துகளால் அந்த கோயிலின் கோபுரம் அமைக்கப்படுள்ளது என்பதாகும். இதை எவ்வாறான ஒரு செயலாக பார்ப்பது. இன்றைக்கு சச்சின் நாளைக்கு இன்னொருவர். இப்படியே கோயிலை கட்டி கும்பிட்டு கொண்டிருந்தால் எம் பகுத்தறிவை மூலையில் போட்டுவிட்டு அனைவரும் ஏதோ ஒருவரில் ஈர்ப்படைந்து அவரை பற்றியே எண்ணிக்கொண்டு புகழ்பாடி கடவுளை மறந்து மனிதரை மனிதன் வணங்கி வாழ வேண்டியதுதான். ரசிப்புத்தன்மை வெறித்தனமாக மாறுவது பொதுவாக அனைவராலும் வெறுக்கப்படும் ஒரு செயலாகும்.


மேலும் ஆடுகளத்தில் எதிரணி வீரர்களோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஏனைய வீரர்கள் சச்சினை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். ஒழுக்க விதிகளை கடைப்பிடிப்பதில் சச்சினுக்கு நிகர் அவரே.

எது எப்படியோ சச்சின் புகழப்பட வேண்டியவரே தவிர போற்றி வணங்கவேண்டிய தெய்வமில்லை. தேசத்துக்கு பங்காற்றியவர் என்ற வகையில் சச்சினை வணகுவது தவறான செயல். கிரிக்கட்டில் அவர் சம்பாதித்துள்ளார். கிரிக்கட் அவரது தொழிலே தவிர சேவை கிடையாது. இந்த நேரத்தில் சச்சினை வாழ்த்தி வழியனுப்புவதே சிறந்த செயலாகும். 

இன்னும் சில நாட்களில் திருக் கோவிலில் குடியேறப்போகும் சச்சின் என்ற புதிய கடவுளுக்கு திருவிழா எடுக்கும் வரை காத்திருந்து களிப்படைவோம்.கோயில கட்டிய எசமானே திருவிழாவுக்கு தவறாமல்  சொல்லி அனுப்புங்க ;)

Wednesday, October 30, 2013

'தல'யின் ஆரம்பம் அறிந்தும் அறியாமலும்.!!


உறவுகளுக்கு வணக்கம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். தீபாவளி என்றாலே பட்டாசுதான் ஞாபகம் வரும். அடுத்து திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது இருக்கும் பரபரப்பு ரசிகர் மத்தியில் ஒருவித காய்ச்சலை ஏற்படுத்தி சென்றுவிடும்.அந்தவகையில் இந்த தீபாவளிக்கு 'தல'அஜித்தின் ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டியநாடு போன்ற படங்கள்  வெளியாகி சக்கை போடு போட காத்திருக்கின்றன. அவற்றுள் அஜித்தின் ஆரம்பத்துக்கு இப்பவே ஏகப்பட்ட வரவேற்பு கிளம்பி இருக்கிறது. தியேட்டர்கள் எல்லாம் புல்புக்கிங் இல் இருக்கின்றன. இந்த நேரத்தில் வெளியாகி உள்ள தகவல்களின் படி படத்தில் அஜீத்தோடு வில்லன் கதாப்பாத்திரத்தில் ஆரியா கலக்குகிறார் என்றும் ஆந்திராவின் நட்சத்திரம் ராணா முக்கிய வேடத்தில் வருகிறார் என்றும் அறிய முடிகிறது. அஜித் ''ரா' உளவுத்துறை அதிகாரி வேடத்தில் புதிய ரக பட்டாசாக வெடிக்கிறார் என்றும் தெரியவருகிறது. இதற்காக பல ஓய்வுபெற்ற 'ரா' அதிகாரிகளிடம் பயிற்சி பெற்றிருக்கிறார் தல.!பொதுவாகவே தன்னோடு முன்னணி ஹீரோக்களை இணைத்து நடிப்பவர் தல. மங்காத்தாவில் ஒரு முன்னணி நடிகர் பட்டாளமே சேர்ந்து கலக்கியது. அதுபோல ஆரம்பத்திலும் அந்த பட்டாளத்துக்கு பஞ்சமில்லை.
இன்று VIP ஷோ காண்பிக்கப்பட உள்ள நேரத்தில் வெளிநாடுகளிலும் இன்று ஆரம்பம் ரிலீஸ் ஆகிறது. இந்த நேரத்தில் ஆரம்பம் படத்தை தடை செய்யக்கோரி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக முகநூளில் கிசுகிசுக்கப்படுவது தல ரசிகர்களுக்கு பெரும் தலையிடியை கொடுத்துள்ளது. இது இப்படி இருக்க தளபதியின் ரசிகர்கள் கூட தலயின் ஆரம்பம் வெற்றபெற வாழ்த்துகளை கூறியுள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.2004 இல் தீபாவளிக்கு வெளியாகிய அட்டகாசம் படத்தில் இடம்பெற்ற
''தீபாவளி தல தீபாவளி'' என்னும் பாடலுக்கு பிறகு அஜித்துக்கு தல என்னும் பெயர் வழங்கப்பட்டு ரசிகர்களால் அழைக்கப்படுவது எல்லோரும் அறிந்தது. எப்படியோ படம் நாளை எதுவித பிரச்சனைகளும் இன்றி ரிலீஸ் ஆனால் இந்த தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு ஆரம்பம் படத்தின் மூலம் தலதீபாவளி தான்.!!


எது எப்படியோ நாங்க தல ரசிகர் இல்லை என்று திடமாக கூறுவதோடு ஆரம்பம் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுவது   சூர்யா ரசிகன்...! ;)

Sunday, September 15, 2013

தமிழனுக்கு - அங்கே தமிழ்நாடு இங்கே யாழ்ப்பாணம்

வேறு மொழிகளுக்கு இல்லாத செழுமை தமிழுக்கு உண்டு. தமிழுக்கு அமுதென்று பெயர், தமிழுக்கு நிலவென்று பெயர் என்று நம் தாய் மொழியை எத்தனையோ விதமாக சிறப்பித்து சென்றிருக்கின்றனர் கவிஞர்கள். அத்தனை சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழியை பேசுகின்ற நாம் உலகெங்கும் பரந்து விரிந்து வாழ்ந்துவருவது எம் இனத்துக்கே பெருமை. தமிழ் வாழாத இடமும் இல்லை தமிழுக்கென்றோர் இடமும் இல்லை என்றான் கவியொருவன்!தமிழுக்கு ஆதாரமாய் பல கோடி தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து சில நண்பர்கள் முகநூல் வழியாக யாழ்மண் தொடர்பாக வினவிய சில விடங்களை கூடியளவில் புகைப்படங்கள் மூலமாக தெளிவுபடுத்தவே நீண்டநாட்களுக்கு பின்னர் இந்த பதிவு.

இந்தியாவின் பெரு மாநிலங்களில் ஒன்றான தமிழ் நாட்டில் தமிழ்தான் முதன்மை மொழி. அங்கே தனி அரசு அமைத்து தமிழர் வாழ்வது உலகறிந்த விடயம். அந்த வழியில் வந்த நாமும் ஒரு சிறப்பான தமிழ் பாரம்பரியங்களை கொண்டு வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் ஆவோம். எமக்கென்று இதுவரை ஒரு தனியாட்சி / சுயாட்சி இல்லாததுதான் வருத்தமளிக்கும் விடயமாகும்.ஆனாலும் எதிர்காலத்தை கற்பனையில் வடிவமைத்து ஏதோ ஒரு நம்பிக்கையில் நிம்மதியாக கழிகின்றது எம் பொழுதுகள். ஈழத்தமிழர் என்றால் வெளிநாடுகளில் சரி சபைகளில் சரி பேசப்படும் ஊர் யாழ்ப்பாணம் தான். யாழ்மண் பற்றி சொன்னால் ஈழம் பற்றி சொன்னதற்கு சமனாகும். காரணம் இங்கேதான் தமிழ்வளர்த்த பெரியார்களும் ஆங்கிலேயனால் கூட வீழ்த்தமுடியாத வீரம் நிறைந்த மாமன்னர்களும் வாழ்ந்து வரலாறாகி சென்றிருக்கின்றனர்.

எம் உயிர் மூச்சே கலாச்சார விழுமியங்களை கட்டிக்காப்பதுதான். ஆனாலும் மேலைத்தேய கலாச்சாரம் எங்கள் மண்ணிலும் வேரூன்றி மெல்லத்தளைந்து  விருட்சமாக எத்தனித்து வருவது ஏற்க்கப்படவேண்டிய உண்மை. தமிழ்நாட்டோடு அப்படியே பொருந்திப் போகாவிட்டாலும் யாழ்ப்பாண மண்ணின் பண்பாடுகளோடு சில விடயங்கள் ஒத்துப்போகின்றமை குறிப்பிடவேண்டிய விடயமாகும்.தமிழர் வீர விளையாட்டுக்களில் இருந்து திருமண, உணவு, கல்வி, போக்குவரத்து போன்ற அனைத்து அடிப்படை விடயங்களிலும் தமிழ்நாட்டோடு ஈழத் தமிழன் வேற்றுப் பிரிப்பின்றி தொடர்புபட்டு காணப்படுவது எம்மூதாதயர்கள் வந்த வழி தமிழ்நாடே என்பதை உணர்த்தி நிற்கின்றது!!
#தமிழ் - யாழ்மண்ணுக்கே உரித்தான இன்னொரு அம்சம் இம்மக்கள் பேசுகின்ற தமிழாகும். இதுதான் வெளிநாடுகளில் யாழ்ப்பாண தமிழன் என்பதை அடையாளப்படுத்தி நிற்கிறது. இதை சிலர் அவமானமாக நினைப்பதும் சிலர் அடையாளமாக பாதுக்கப்பதும் என மாறுபட்டு  காணப்படுகிறது இதுதொடர்பான மக்களின் மனோநிலைகள்.
#கல்வி- இலங்கையைத்தாண்டி உலக அளவில் பல கல்விமான்களைத் தந்த பெருமை கொண்ட ஒரே பூமி யாழ்ப்பாணம் தான். ஆனால் இன்று பல நாகரிக மாற்றங்களால் கல்வியும் தன் சிறப்பம்சத்தை இழந்துபோகும் அபாயம் மேலோங்கி காணப்படுகிறது.
#உணவு - யாழ்ப்பாணம் என்றால் கறுத்தக்கொழும்பான் என்பர். கறுத்த கொழும்பான் என்பது ஒரு மாம்பழ வகையாகும். இதை உண்ட வெளியூரார் சலித்ததும் இல்லை கேட்டு வாங்காமல் சென்றதும் இல்லை எனலாம். அவ்வளவு இனிய பழம் ஒன்று.அடுத்தது புட்டு (பிட்டு) - நீங்கள் அறிந்த கேரளத்து குழல் புட்டின் அத்துணை சிறப்புக்களும் உள்ளடங்கியது தான் யாழ்ப்பாண மண்ணில் அவிக்கப்படும் புட்டு.

கூழ் - ஆடிப்பிறப்புக்கு கூடிப்பனங்கட்டி கூழும் குடித்து மகிழ்வோம் யாம்.
பனை- பனை வளம் மிக்க பிரதேசமான யாழ்ப்பாண மண்ணில் நுங்கு, சர்க்கரை, பனங்கட்டி, கள் போன்ற எதற்கும் பஞ்சம் இல்லை. கற்பக தருவாம் இயற்கையின் கொடையான பனைமரத்தை பெரியவில் பெற்றது யாம்செய்த புண்ணியம் என்பேன்.


#நூலகம் - தெற்காசியாவிலேயே அரிய பல நூல்களை கொண்டமைந்த நூலகம் தான் யாழ்ப்பாண பொது நூலகம். ஆனாலும் இது கடந்த கசப்பான காலங்களில் தேசத்துரோகிகளால் எரியூட்டப்பட்டது அனைவரும் அறிந்தவிடயம். ஆனாலும் இன்று மீண்டும் கட்டமைக்கபப்ட்டு கட்டடக்கலை யால் மிளிர்கிறது தவிர நூல்கள் என்னும் பொக்கிசங்களால் அல்ல என்பது அனைத்து தமிழரும் வருந்தவேண்டிய மேலும் சிந்திக்க வேண்டிய விடயம்.


இன்னும் சில அழகான புகைப்படங்கள் ...........இயற்கை அன்னையின் கொடைகள்  நிறைந்த கடலால் சூழப்பட்ட ஒரு அழகிய தீவில் உள்ள வளம் நிறைந்தயாழ்மண்ணில் பிறந்து இத்தனை சௌகரியங்களையும் அனுபவிக்க என்ன தவம் செய்தேன்!!
 -நன்றி-Monday, May 13, 2013

புயலுக்கு இன்னும் நான்கு மணிநேரம்....


என்னய்யா இது புயல் எச்சரிக்கை விடுக்கின்றானே என்று ஜோசிக்காதீங்க பாஸ்! நேற்றிரவு எனக்கு மட்டுமல்ல யாழில் இருக்கும் அநேகமாநோருக்கு  கடினமான அனுபவத்தை வழங்கியதாக அமைந்திருக்கும்.யாழ் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை 70 KM வேகத்தில் புயல் தாக்கவுள்ளதாக வெளியான செய்தியால் பலர் பதற்றமடைந்தனர். இது சில இணையத்தளங்களிலேயே நேற்றிரவு முழுமை பெறாதஇ  தகவல்களை உள்ளடக்கி இருக்காதஇ தெளிவில்லாத செய்தியாக வெளியாகியமையால் பலரும் சந்தேக கண்கொண்டே பார்த்தனர்.இரவு 11.00

ஆமை வேகத்தில் ஆடிய  ஷேன் வட்சன் திடீரென்று அடித்த ஆறு சிக்சர்களை பார்த்துவிட்டு சூரியனின் நேற்றைய காற்று காதுக்குள் ரீங்காரம் இசைக்க தூக்கம் கண்களை மெல்ல வருடியது. என் மண்டைக்கு நேரெதிரே உஷா சுழன்று ஆடிக்கொண்டிருந்தாள். அவள் இல்லையென்றால் இந்தக்காலந்தில் நிம்மதியாய் தூங்க முடியாது என்று எனக்கு நேற்றுவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.ஹலோ! நில்லுங்க சார் ( உஷா என்றால் - USHA  நிறுவனத்தின் பா(f)ன் ''காற்றாடி'') இந்த காலத்தில் எதையும் தெளிவா சொல்லிப்புடனும் பாருங்கோ. அதுதான்.
இரவு 01.45      

காலையில் எழும்பவில்லை என்று அம்மா தண்ணீரை உடலெல்லாம் ஊற்றிவிட்டாரோ என்று எண்ணிக்கொண்டு எழுந்தால் வியர்வை என்னை குளிப்பாட்டிக்கொண்டிருந்தது. ஒரு லட்சம் வியர்வை துளிகள் என்னுடலில் துள்ளி விளையாடின. மேலே அண்ணார்ந்து பார்த்தால் உஷா அன்னாராகி விட்டதை உணர முடிந்தது. அதுதானப்பா கரண்டு நின்று போச்சு.கைத்தொலைபேசியின் வெளிச்சத்தில் வீட்டின் அனைத்து பகுதிகளையும் பலமுறை வளம் வந்தன என் கால்கள். ஒரு நிமிடத்தில் அரபு நாட்டு பாலைவனத்தில் தடம் மாறிய பயணியாக என்னை நான் உணர்ந்தேன். அந்த அளவு வெப்பத்தை கக்கிக் கொண்டிருந்தன பூமி 10 வானம் 10 காற்று எல்லாமே!! இந்த நேரத்தில் கடவுளாக தெரிந்தது ஒரு விசிறி மட்டை மாத்திரமே. நேற்றிரவு படித்திருந்த புயல் எச்சரிக்கை செய்து அப்போது கவலையை தந்திருந்தாலும் இப்போது எனக்கு புயல் அடித்தால் என்ன என்று சொல்லும் அளவுக்கு உடபெல்லாம் அடுப்பில் வைத்த தண்ணீர் போல கொதித்தது. காண்டாவனம் என்றால் என்னவென்று நேற்றைய இரவுப்பொழுது காட்டிச்சென்றது. அடக்கமுடியாத அனலில் கதவைத் திறக்க எனக்கு திறக்க சற்று பீதியாய் இருந்தது. வெளியே இரண்டு நாய்கள் கும்மிருட்டில் குலைத்துக்கொண்டு திகில் மூட்டின. காலையில் பேசுகின்ற வீர வசங்களை இரவில் அதுவும் மின்சாரம் இல்லாத நேரங்களில் எந்த வீரனாலும் பேச முடிவதில்லை என்பதை முதல் முதலில் வீட்டுக்குளேயே அனுபவ ரீதியில் உணர்த்திய நாள் அது.
 நேரம் 02.59

மின்சாரத்தை எதிர்பார்த்து விழிகள் இருளோடு சங்கமமாகின. இத்தனைக்கும் வீட்டில் அனைவரும் அமைதியாகவும் ஆர்பாட்டம் இல்லாமலும் உறங்கிகொண்டிருந்தது ஆச்சரியத்தையும்  வரவழைத்தது. கைத்தொலைபேசி மீதியாக வைத்திருந்த கொஞ்சநஞ்ச சார்ஜையும் ஒளிர்ந்துகொண்டிருந்த அதன் மின்குமிழ் உறிஞ்சி குடித்து தீர்த்தது. ஆத்தாக்கொடுமை என்பார்கள் அதன் எல்லைக்கு சென்ற நான் இறுதியாக பேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலை போட்டு மீன்கார சபைமேல் உள்ள என் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் தீர்த்ததாக எண்ணினேன். ஆனால் ஒரு டவல் தோய்த்து போட்டது போல  என்னால் தடுக்க முடியவில்லை.

நேரம் காலை : 03.45

இருளுடனும் வியர்வையுடனும் தூக்கத்துடனும் எரிச்சல் வெறுப்பு போன்றவைகளுடனும் போராடி தோல்வியுற்று கதிரையில் சாய்ந்தேன். கடவுள் என்னை அழைத்தது போல உஷா ஓட ஆரம்பித்த சத்தம் என் காதுகளை எட்ட கண் முன்னே இருந்த மங்கல் ஒளி மின்குமிழ் (டிம் பல்ப்) ஒளிர ஆரம்பித்து. என்ன கொடுமை சார் என்னும் அளவுக்கு இந்த சிறிய விடயம் இரண்டு மணி நேரத்தில் என்னை ஆட்டிப்படைத்தது சற்று வேடிக்கையான விடயமும் கூட. இதை நான் பகிர வேண்டும் என்று நினைத்தது இச்சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது. பட்ட வலி சிறிதோ பெரிதோ பகிர்வதே எம் கடமை(:p)
மீண்டும் சௌகர்யமான தூக்கம் ஆரம்பம். ஆனால் எனது அப்பா தொழில் நிமித்தம் எழுவது என் காதுகளுக்கு தெரிந்தது. அப்போதே உணர முடிந்தது தூக்கம் என்றால் என்னவென்று.

நேரம் காலை: 06.15

குளிர்வது போல ஒரு உணர்வு எழுந்து பார்த்தால் புயலும் மழையும் பூமியை குளிர்வித்துகொண்டிருந்தன.  இந்த நேரத்தில்  இரண்டு மணிநேரத்துக்கு முன்பு வரை ஆட்டிப்படைத்த வெப்பம் என்னும் அரக்கன் தண்ணீரில் குளிக்கவார்க்கப்பட்டும் புயலினால் அடித்தும் செல்லப்பட்டான் கூடவே தோட்டம் செய்வோரின் வருமானத்தையும்!!

ரிஸ்க் ஆனாலும் லை(f)ப் ஜாலி பாஸ் - என்ஜாய் மகனே என்ஜாய் :-)


Friday, May 10, 2013

சும்மா பார்த்த 'சென்னையில் ஒரு நாள்'


பொதுவாக நான் திரைப்படங்களை எதிர்பார்ப்புக்களோடு பார்ப்பதில்லை. ஏதோ சும்மா ஒரு பொழுது போக்குக்காகத்தான் பார்ப்பேன். திரையரங்குகளுக்கும் செல்வது மிகக்குறைவு. தொலைபேசிக்கு மீள்நிரப்ப போகும் போது கடைக்காரரிடம் சில ஒரிஜினல் DVDகளை வாங்கி வருவது வழமை. அவ்வாறுதான் சென்னையில் ஒருநாள் படம் பார்த்த கதையும் கூட. படத்தை வாங்கி வந்து கிட்டத்தட்ட பத்து நாட்களாகிவிட்டது. நேற்று இரவு IPL போட்டி தூக்கம் வர வைத்ததால் 'சென்னையில் ஒரு நாள்' என் கண்ணில் பட்டது. படம் ஆரம்பித்தவுடன் பாடல் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொருவரின் கதை என்று சற்று போ(டி)ராகவே ஓடியது. ஒரு பக்கம் தான் சண் டிவியில் ஒரு சிறந்த நிருபராக வர வேண்டும் என்று நினைத்துபின்னர் அந்த சந்தர்பம் கிடைத்த மகிழ்ச்சியில் ஒரு இளைஞன். மிகவும் பிரபலமான 'சயினிங் ஸ்டார்' என்னும் பட்டத்தோடு வளம் வரும் நடிகராக பிரகாஸ்ராஜ். அடுத்து ஆரம்பத்தில் நான்கு ஐந்து பைக்குகளில் ரௌடிகள் போல ஒரு காரில் செல்லும் பெண்ணை துரத்துகிரார்கள் சிலர். மறுபக்கம் குடும்ப சூழ்நிலைகளினால் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டு வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்ட ட்ராபிக் கான்ஸ்டபிள் ஆக சேரன். இவர்களா எல்லோருமாக காலை எட்டு மணியில் இருந்து மாலை நான்கு மணிவரை சென்னையில் சந்திக்கும் விபரீதமான விளையாட்டுக்கள் நிறைந்த படம் தான் சென்னையில் ஒரு நாள். இதிலே வைத்தியர் ஆக வரும் பிரசன்னாவும் பிரகாஸ்ராஜ்சின் மனைவியாக வரும் ராதிகாவும் கண்ரோல் ரூமில் இருந்தபடியே கண்களில் பயம் காட்டும் சரத்குமாரும் அசத்தியிருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.


சேரனே படத்தின் முக்கிய திருப்புமுனையாக திகழ்கிறார். நடிப்பில் என்பதை விட வாகனம் செலுத்துவதில் சாரதியாய் சாதித்து தன் களங்கத்தை துடைத்து சாந்தம் காட்டுகிறார்.

சற்று தூக்கலாகவே முதல் முப்பது நிமிடங்கள் ஓடினாலும் அடுத்துவரும் முக்கால்வாசியும் நம்மை திக்குமுக்காட வைப்பது எதிர்பார்க்காத விறுவிறுப்பு.

இங்கே நான் கதையை கூற விரும்பவில்லை. இது விமர்சனம் கூட இல்லை. போ(B)ர் அடிக்கிறதே என்று இரவு பதினோரு மணிக்கு பின்னர் போட்ட படம் தூங்க சென்றும் தூக்கத்தை தடுத்து என்னை அதை பற்றியே சிந்திக்க வைத்ததால் இங்கே பகிர்கின்றேன். பார்க்காதவர்கள் ஒரு முறை பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்!!  நல்ல படங்களை மிஸ் பண்ணிடாதீங்க :-)


Friday, May 3, 2013

வில்லங்கம் பிடிச்ச விராட் கோலி


நீண்ட நாட்களாக இந்த மனுஷன் பற்றியும் இந்தாளின் வீர தீர செயல்கள் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் விறைத்து போய் நிற்கும் விராத்து கோழியின் ரசிகர்கள் சிலர் கொந்தளித்ததால் வேண்டாம் என்று நினைத்தேன். அப்போது காலமும் சரி இல்லை. ஆனால் அடக்க முடியாமல் சில விடயங்களை இப்போது கொட்டியே தீர வேண்டும் என்று வந்துள்ளேன்.

                (அண்ணல் கோழி குஞ்சின் பரிவாரங்கள் இப்போதே நடையை கட்டுதல் அழகு)

அவுட்டானால் துடுப்பை தூக்கி வீசுறது சதம் அடித்தால் அதே துடுப்புக்கு கிஸ் அடிக்கிறது இந்தாளின் வாடிக்கை. எதிரணி வீரர்களை மதிக்க தெரியாதவர் என்று ஏற்கனவே இவர் பெயர் பெற்றது மேலதிக சிறப்பு. இந்திய அணியின் கப்டன் தோனியால் கூட அறிவுரைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட கட்டுக்கடங்காத காளை. அளவுக்கு  அதிகமான திறமையை கொண்ட இந்த இளம் புயல் தன் அறிவு கெட்ட அலங்காரமான அசிங்கமான வெளிக்கள செயற்பாடுகளால் தன் தனித்துவத்தை இழந்து நிற்பது வேடிக்கையான விடயமாகும். களத்தில் சூடாக இருந்தால் பறவாயில்லை அடுத்தவனை சூடேற்றி பார்த்தால் அது உடம்புக்கு ஆகாது என்று இன்னமும் இந்த மனுஷனுக்கு விளங்கவே இல்லை. கடுப்பேற்றி கன்னத்தில் அறை வாங்கிய இவரின்  சக வீரர் சிறிசாந்த் கூட திருந்தி தற்போது அடக்கி வாசிக்கிறார்.  


கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் ரசிகர்களை பார்த்து நடுவிரல் காட்டி ஊடங்கங்களால் ஊறவைத்து துவைத்து எடுக்கப்படார். பின்னர் தனது ஆத்திர புத்தியே தான் ஆக்ரோசமாகவும் அதிரடியாகவும் விளையாட காரணம் என்று அறிக்கை விட்டார். அப்போ எனக்கு, கிறிஸ் கெயில், கில்கிறிஸ்ட் எல்லாம் மூஞ்சில பிளேட் போட்டுகொண்டா கிறவுண்டுக்கு வாறாங்க என்று கேட்க தோன்றியது.  இதெல்லாம் பரவாயில்லைங்க, அண்ணன் இம்முறை பெங்களூரு றோயல் சலஞ்சஸ் அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள இளம் கப்டன் வேறு. ஆரம்பத்தில் அடித்து நொருக்கினார். ஆனால் கடந்த நான்கு போட்டிகளில் டென்சன் தலைக்கேறி பந்துகளை எதிர்கொள்ள திணறுகிறார். அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறுகையில் பார்க்கணுமே 'முட்டை போடுவதுக்கு கோழி எப்படி கொக்கரிக்குமோ' அதைப்போல தலைவர் 'கொக்கரோ கோ' என்று நடையை கட்டுவார்.


எவ்வளவு திறமை இருந்தாலும் பணிவு, மைத்தனத்தில் நடந்துகொள்ளும் விதம் போன்ற பண்புகள் இல்லாவிட்டால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியாது என்பதற்கு இந்த இளம் புயல் ஒரு உதாரணம். கோலிக்கு ரசிகர்கள் இல்லையா என்று கேட்கலாம். இருகின்றார்கள். இந்தியாவில் இருக்கிறர்கள். வெளிநாட்டு ரசிகர்களால் இவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏன் இந்தியாவில் கூட இவருக்கு எதிரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றால் பார்க்கவா வேண்டும்.  காரணம் ஒன்றே ஒன்று தான் அது மரியாதை அற்றவர் என்பதாகும். 
என்னை பொறுத்தவரை கோலி 200 சதம் அடித்தாலும் அகங்காரம், ஆணவம், அலங்காரம் போன்றவற்றை கைவிடும் வரை  ''பிரைன் லாரா, ராகுல் ராவிட், முத்தையா முரளிதரன், சச்சின் டெண்டுல்கர்''இவர்களுக்கு முன்னால் வெறும் கால் தூசி தான்!!