*வணக்கம் நண்பர்களே, எழுதுவதற்கு சூடாக எத்தனையோ எண்ணத்தில் இருந்தாலும் எழுதுகின்ற மனநிலை இல்லாமையால்எழுதாமல் இருந்துவிட்டு, நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டுமொரு புதுவருடத்தில் இன்று சந்திக்கின்றேன்.
இப்படி பல நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு ஆழமாக சிந்திப்பதுண்டு. யாரிடமும் இதைப்பற்றி கலந்துரையாட முடிவதில்லை. காரணம் இப்படியான நிகழ்ச்சிகளை நம்மூரில் யாரும் பெரிதாக பார்ப்பதுமில்லை. அப்படி ஆயிரத்தில் ஒருவனாக யாரவது பார்த்துவிட்டாலும் அந்த விஞ்ஞானியிடம் வாதிடவும் எனக்கு தைரியம் இருக்காது. அப்படி ஒன்றும் இதில் விடயம் இருக்காது என்று எண்ணிவிட்டு இறுதியில் எண்ண அலைகள் ஓய்ந்துவிடும். தற்காலத்தில் அப்படியான நிகழ்ச்சிகளை பார்ப்பதும் இல்லை. காரணம் கடுப்ஸ். இன்று எனது முகநூலில் நண்பர் ஒருவர் தமிழ் நாட்டு நண்பரின் ஒரு சிறுபதிவை பகிர்ந்திருந்தார். அப்போது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. யாரும் இந்த விடயம் பற்றி பேச மாட்டார்களா என எண்ணி இருந்தேன். களம் அமைந்தது. இன்று எழுதுகிறேன்.
விடயத்துக்கு வருகிறேன், ராஜ் டிவி, கப்டின் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற இந்திய தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் இது.
செலிபிரிட்டீஸ் என்னும் பெயரில் அனைவருக்கு அனேகமாக தெரிந்த நாயகர்களில்(ரஜினி, கமல் விஜய், சூர்யா, யுவராஜ் சிங், டோனி,சச்சின்,முரளி) பாதி முகத்தை திரையில் காண்பித்துவிட்டு மீதி முகத்தையும் ஊகித்து யார் என்று பதில் சொல்பவர்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் ஏன் ஐம்பதாயிரம் வரை பரிசு கொடுக்கின்றனராம். போதாக்குறைக்கு குறித்த பிரபலங்களின் பயோ டேட்டாவில் இல்லாத விடயங்களை கூட வெளியில் சொல்லிவிட்டு கேள்வி கேட்கின்றனர்.
ஆரம்பத்தில் இலங்கையில் இருக்கும் நான் கூட இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று போராடினேன். இறுதியில் தான் தெரிந்தது இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவில் இருப்பவர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்று.ஆனால் தற்போது நான் நினைத்தை போலவே பல உண்மைகளை நண்பர்கள் தெரியப்படுத்துகின்றனர்.

இவ்வாறாக பல சந்தேகங்களை கிளப்பிய இந்த செலிபிரிட்டீஸ் நிகழ்ச்சி பற்றி கிடைத்த மேலதிக தவல்களை உங்களுடன் பகிர்கின்றேன்.
இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் போன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கோல் பேலன்சை(mobile balance) அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:-
1. இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள்
பணி.
2. ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.
3. கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.
4. நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.
5. இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.
புத்தாண்டு அனைவர்க்கும் நல்லதையே கொடுக்கட்டும்.!!
2 comments:
நல்லது. தொடர்ந்தும் எழுது குமரா ;) வாழ்த்துக்கள்.
நன்றி, மூத்த பதிவரே !
Post a Comment