Sunday, April 14, 2013

தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா??


வணக்கம் உறவுகளே, புத்தாண்டில் ஒரு சிந்தனையோடு உங்களை தேடி வந்துள்ளேன். காரணம் இன்று அதிகம் நம்மை ஆட்டிப்படைக்கும் சுயநலமான மனதை கொல்லும் சம்பவங்கள் தான்.

மனிதன் - மனிதன் என்பவன் யார் என்று முதலில் யாராவது கேட்டிருந்தால் அதற்கான மிகச்சரியான பதிலை எவராலும் கொடுத்திருக்க முடியாது. காரணம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம். அவனின் குணவியல்புகள் தொடக்கம் நடவடிக்கைகள் வரை ஆளுக்காள் மாறுபட்டு காணப்படுவதே இதற்கு முக்கியமான காரணியாகும்.



தினமும் காலை புலர்கின்றது அந்தி சாய்கின்றது. வேலைக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் வெளியில் தினமும் ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நான் உன்னை சந்திக்கின்றேன் என்னை இன்னொருவன் சந்திக்கின்றான். உன்னை விட நானும் சில சமயங்களில் என்னைவிட நீயும் உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் நடிக்கின்றோம். சில சமயங்களில் அதற்காக பரிசுகளையும் பெறுகின்றோம். எம்முள் எத்தனை பேர் உண்மையாக மனிதனாக வாழ்கின்றோம். சுய நலத்துக்ககவோ அல்லது வேறு விதமான அபிலாசைகளுக்ககவோ பிறரை நாம் ஏமாத்திக்கொண்டே எம்மையும் மெல்ல மெல்ல மிருகத்தனமான வாழ்க்கை முறைக்குள் புகுத்திக்கொண்டிருக்கின்றோம். ''வாழ்க்கை வாழ்வதற்கே'' என்று வசனம் பொழியும் சிலர் அடுத்தவன் வீட்டுக்கு தீயும் தன்வீட்டுக்கு தண்ணீரும் என்றே வாழ்கின்றனர். அதாவது எரியும் வீட்டுக்கு ஊற்றவேண்டிய தண்ணீரை தேவையற்று தன வீட்டுக்கு ஊற்றுவதன் மூலம் தாம் நன்மை அடைவதாக நினைத்து பிற்காலத்தில் தம் வீட்டையே எரிகின்ற வீடாக மாற்றிவிடுகின்றனர்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் அண்மையில் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் வந்திருந்தார். நீங்கள் இங்கே ஒரு கோடி வென்றால் என்ன செய்வீர்கள் என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ''புற்று நோயால் அவதிப்படும் அனைத்து இந்தியர்களுக்கும் தேவையான மருந்துகளை வாங்க முழுப்பணத்தையும் கொடுப்பேன்'' என்று பதிலளித்தார். ஆனால் போட்டியின் முடிவில் அவரால் வெல்ல முடிந்தது வெறும் 10,000 மட்டுமே. அந்தப்பெண்ணின் இடத்தில் இருந்து பார்க்கும் போது அது அதிநம்பிக்கையாக இருந்தாலும் அவரின் சிந்தனை அந்த இடத்தில் ஒரு உண்மை மனிதனை வெளிக்காட்டி நின்றது. உண்மையில் அவர் பணத்தை அவ்வாறு கொடுக்கின்றாரோ இல்லையோ ஆனாலும் அந்த பெண் சிந்தித்ததை போல வேறு எவராலும் 'இலகுவாக குறுகிய நேரத்தில் கிடைக்கின்ற பெருந்தொகை பணத்தை' நல்ல வழியில் பிறருக்காக செலவு செய்யவேண்டும் என்று எண்ணியிருக்க முடியாது.

அடுத்தவன் அழுகின்றான் அதை பார்த்து நான் புன்னகைக்கின்றேன். எனது பெயர் மனிதன். (?) சிலரை 'மனித வடிவில் கடவுள்' என்பார்கள். நான் அவ்வாறு சிலரை காண்கின்ற போதெல்லாம்  ஏன் என்னையும் என்னைசார்ந்த எல்லா மக்களையும் நீ இவ்வாறு படைக்கவில்லை என்று (நான் நம்பாத) கடவுளை பார்த்தும் கேட்டதுண்டு.

அன்பு கருணை இரக்கம் இவை எல்லாம் வெளிப்படுவது மனிதன் வடிவில் தான். ஆனால் இப்போது மெல்ல மெல்ல அது மாறி மிருகங்கள் தமக்குள் தாமே இவற்றை எல்லாம் கடைப்பிடித்துக்கொண்டும் மனிதன் என்பவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தினம் தினம் பொறாமை அகந்தை கோபம் போன்றவற்றால் கொண்று தின்றுகொண்டும் இருக்கின்றான்.

ஒவ்வொரு பண்டிகையும் வருகின்றது போகின்றது என்றில்லாமல் அது மானிடர்களாகிய எங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்ல வருகின்றது என்றால் '' மனிதா நீ மனிதனாய் வாழவேண்டும் என்பதையே நான் ஒவ்வொரு வருடமும் உனக்கு பிடித்த உருவில் வந்து சொல்லி செல்கின்றேன்' என்று கூறுகின்றது. பிறக்கின்ற வருடம் எல்லோருக்கும் சாந்தி சமாதானம் கிடைக்க இனிய ஆண்டாய் மலரட்டும் என்று வாய்வாதம் பண்ணிவிட்டு பஞ்சமா பாதகங்களை தானும் செய்து பிறரையும் செய்ய தூண்டி விடில் அது மனிதனுக்குரிய செயல் தானா.? ஆரம்பத்தில் கேட்டது போல எல்லோரும் ஒருமுறை இந்த இனிய நாளில் உங்களையும் உங்களை துன்புறுத்தி வேதனைப்படுத்தி தாழ்த்தி வாழ்கின்றவர்களையும் கேளுங்கள் ''தைரியமாகச்ச்சொல் நீ மனிதன் தானா.?''


அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

2 comments:

Unknown said...

தம்பி நல்ல கருத்த தான் சொல்லி இருக்கீங்க சூப்பர் எல்லாருமே மத்தவங்களுக்கு உதவி செய்யாவிடினும் தீங்கு செய்யாமல் இருந்தாலே போதுமானது

Unknown said...

ஆமா அண்ணா, உண்மைதான்!!
கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா :)